உளவுப்புனைவு
உளவுப்புனைவு அல்லது ஒற்றர் புனைவு (Spy Fiction) என்பது ஒருவகை புனைவுப் பாணி. பன்னாட்டு அரசியல், உளவு நிறுவனங்கள், ஒற்றர்கள் போன்ற கருப்பொருளைக் கொண்ட புனைவுப் படைப்புகள் உளவுப்புனைவு எனப்படுகின்றன. 19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஒற்றர்கள் பற்றிய புனைவுப் படைப்புகள் வரத்தொடங்கி விட்டாலும், 20ம் நூற்றாண்டில் பன்னாட்டு அரசாங்கள் தொழில்முறை உளவு முகாமைகளை உருவாக்கிய பின்னரே இப்பாணி பரவலாக அறியப்பட்டது. உலகப் போர்களின் போது தொடங்கிய உளவுப்புனைவின் பெருவளர்ச்சி, பனிப்போர் காலகட்டத்தில் உச்சத்தை எட்டியது. நிஜ உலகில் அமெரிக்க சி. ஐ. ஏ மற்றும் சோவியத் யூனியனின் கேஜிபி ஆகிய முகாமைகளிடையே நடைபெற்ற மோதல்கள் பல்லாயிரக்கணக்கான உளவுப் புனைவுப் படைப்புகளுக்குக் கருபொருளாய் அமைந்தன. புதினங்கள், சிறுகதைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், நிகழ்பட ஆட்டங்கள் என பலவகைகளில் புனைவுப் படைப்புகள் வெளியாகின. ஜான் லே காரீ, ஃபிரெட்ரிக் ஃபோர்சித், டாம் கிளான்சி போன்றோர் இக்காலகட்டத்தின் உலகப் புகழ் பெற்ற உளவுப் புனைவு எழுத்தாளர்களாவர். பனிப்போர் முடிவுக்கு வந்த பின் பன்னாட்டுத் தீவிரவாதத்தைக் களமாகக் கொண்டு உளவுப்புனைவுப் படைப்புகள் படைக்கப்படுகின்றன.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brett F. Woods, Neutral Ground: A Political History of Espionage Fiction (2008)வார்ப்புரு:ISBN?
- ↑ Cuddon, J. A. The Penguin Dictionary of Literary Terms and Literary Theory, Third Edition (1991) pp. 908–09.
- ↑ Drabble, Margaret. The Oxford Companion to English Literature, Sixth Edition (2000) pp. 962–63.