உள்ளடக்கத்துக்குச் செல்

பேதுரு (திருத்தூதர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புனித பேதுரு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருத்தூதர் புனித பேதுரு
Saint Peter the Apostle
முதலாம் திருத்தந்தை பேதுரு.
ஓவியர்: பீட்டர் பால் ரூபென்ஸ் (1577-1640). ஓலாந்து.
பிறப்புதகவலில்லை
இறப்புகி.பி. 64; உரோமை
முக்கிய திருத்தலங்கள்புனித பேதுரு பேராலயம், வத்திக்கான் நகர்
திருவிழாபெப்ரவரி 22, ஜூன் 29, நவம்பர் 18
சித்தரிக்கப்படும் வகைதிறவுகோல்கள்; தலைகீழாக சிலுவையில் அறையப்பட்ட மனிதர்; திருச்சபையின் முதல் திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையால் போற்றப்படுகிறார்.
புனித பேதுரு (திருத்தந்தை)
Saint Peter
ஆட்சி துவக்கம்கிபி சுமார் 30
ஆட்சி முடிவுகிபி சுமார் 67
முன்னிருந்தவர்யாருமில்லை (இவரே முதலாமவர்)
பின்வந்தவர்லைனஸ்

புனித பேதுரு அல்லது புனித இராயப்பர் (ஆங்கிலம்:Saint Peter) என்பவர் இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்) தலைமையானவர். இவரது இயற்பெயர் சீமோன் (Simon) ஆகும். இவரைத் தம் சீடராக அழைத்த இயேசு "பேதுரு" என்னும் சிறப்புப் பெயரை அவருக்கு அளித்தார்[1]. இப்பெயரின் தமிழ் வடிவம் இராயப்பர் என்பதாகும்.

பேதுரு கலிலேயாவைச் சேர்ந்த மீனவர் ஆவார். இயேசு இவரைத் தம் சீடராகத் தெரிந்து கொண்டார். இவர் கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். நீரோ மன்னனின் ஆட்சிக் காலத்தில் இவர் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார். தூய பேதுருவின் கல்லறை உள்ளதாகக் கருதப்படும் வத்திக்கான் நகரத்தில் கத்தோலிக்க திருச்சபையின் முக்கியமான வழிபாட்டிடங்களுள் ஒன்றாகிய புனித பேதுரு பெருங்கோவில் அமைந்துள்ளது.

புதிய ஏற்பாட்டு நூல்களில் பேதுரு

[தொகு]

பேதுருவின் வாழ்க்கைக் குறிப்புகள் சில புதிய ஏற்பாட்டு நூல்களாகிய நற்செய்திகளிலும் திருத்தூதர் பணி நூலிலும் உள்ளன. இயேசுவின் பணிக்காலத்தில் அவர் தம் சீடராக அழைத்துக்கொண்ட பன்னிரு திருத்தூதர்களுள் முதலிடம் பெறுபவர் பேதுரு. மீன் பிடித்தல் தொழிலைச் செய்துவந்த பேதுருவை ஒருநாள் இயேசு கலிலேயக் கடலருகில் கண்டார். இயேசு அவரை நோக்கித் தம் சீடராகுமாறு கேட்டார். பேதுருவும் இயேசுவைப் பின் தொடர்ந்தார். பேதுருவின் இயற்பெயர் சீமோன்; அவர்தம் தந்தை பெயர் யோனா. எனவே அவர் "யோனாவின் மகன் சீமோன்" என்று அழைக்கப்பட்டார். ஆனால் இயேசு அவருக்கு ஒரு புதிய பெயரைக் கொடுத்தார். விவிலியத்தில் இவ்வாறு புதிய பெயர் கொடுக்கும்போது அப்பெயரைப் பெறும் மனிதர் ஒரு சிறப்புப் பணிக்கு அழைக்கப்படுவதை அப்பெயர் குறிப்பது வழக்கம். இயேசு சீமோனுக்குப் பேதுரு என்னும் பெயரைக் கொடுத்ததும் தனிப்பொருள் கொண்ட நிகழ்வுதான்.

பேதுரு என்னும் சொல் அரமேய மொழியில் "கேபா" என வரும். அதன் பொருள் "பாறை" ஆகும். பேதுரு என்பது அதன் கிரேக்க வடிவம். இலத்தீனில் "Petra" என்றால் பாறை. அதைத் தழுவியே சீமோனுக்கு "Petrus" (ஆங்கிலத்தில் Peter) என்னும் பெயர் வந்தது.

பேதுருவை இயேசு "பாறை" என்று அழைத்ததற்கான விளக்கத்தை மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது.

மத்தேயு 16
13-19

பேதுருவின் குடும்பம்

[தொகு]

பேதுருவின் குடும்பம் பற்றிய சில தகவல்கள் நற்செய்திகளில் உள்ளன. அவர் கப்பர்நாகும் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார் என்றும், திருமணமானவர் என்றும் அவருடைய மாமியார் காய்ச்சலாய் இருந்தபோது இயேசு அவருடைய வீட்டுக்குச் சென்று அப்பெண்மணிக்கு நலமளித்தார் என்றும் நற்செய்திகள் குறிப்பிடுகின்றன.

மாற்கு 1
29-31

பேதுருவின் பெயர் பற்றிய குறிப்பு

[தொகு]

பேதுருவின் இயற்பெயர் எபிரேயத்தில் சீமோன் என்பதாகும். அது கிரேக்கத்தில் Σιμων என்று எழுதப்பட்டது. புதிய ஏற்பாட்டில் இரு இடங்களில் அப்பெயர் "சிமியோன்" (Συμεων) என்னும் வடிவத்தில் வருகிறது (காண்க: திருத்தூதர் பணிகள் 15:14; 2 பேதுரு 1:1).

இயேசு பேதுருவுக்குக் கொடுத்த சிறப்புப் பெயர் "பாறை" அல்லது "கல்" என்னும் பொருள்கொண்ட அரமேயச் சொல்லாகிய "கேபா" (பண்டைக் கிரேக்கம்Kephas) என்பதாகும். பேதுரு "கேபா" என்று ஒன்பது முறை புதிய ஏற்பாட்டு நூல்களில் அழைக்கப்படுகிறார். யோவான் நற்செய்தி ஒருமுறையும் தூய பவுல் எழுதிய திருமுகங்கள் எட்டு முறையும் பேதுருவை "கேபா" என்று அழைக்கின்றன.

"கேபா" என்னும் அரமேயச் சொல் கிரேக்கத்தில் Petros என்று பெயர்க்கப்பட்டது. அதிலிருந்து தமிழ் "பேதுரு" என்னும் வடிவம் பிறந்தது. பேதுரு என்னும் பெயர் நற்செய்தி நூல்களிலும் திருத்தூதர் பணிகள் நூலிலும் 150 தடவைக்கு மேலாக வருகிறது. "சீமோன் பேதுரு" என்னும் இரட்டைப் பெயர் பெரும்பாலும் யோவான் நற்செய்தியில் சுமார் 20 தடவை வருகிறது.

கிரேக்க மொழி பேசிய கிறித்தவர் நடுவே "பேதுரு" என்னும் சொல் (பாறை, கல்) எளிதில் பொருள் விளங்கும் பெயராக விளங்கியிருக்கும்.

பேதுரு முதல் திருத்தந்தை என்பது பற்றிய கருத்துகள்

[தொகு]

கத்தோலிக்க திருச்சபை இயேசுவின் திருத்தூதராகிய பேதுரு முதல் "திருத்தந்தை" (Pope) என்று அறிக்கையிடுகிறது. அதற்கு, கீழ்வரும் காரணங்கள் காட்டப்படுகின்றன:

  • இயேசு தம் நெருங்கிய சீடர்களாகத் தெரிந்துகொண்ட "திருத்தூதர்கள்" (Apostles) பன்னிருவரில் முதன்மை இடம் பேதுருவுக்கு அளிக்கப்பட்டது;
  • இயேசு பேதுருவுக்கு அளித்த சிறப்புப் பணி;
  • பன்னிரு திருத்தூதர் குழுவில் பேதுரு ஆற்றிய தனிப்பட்ட பணி.

பேதுரு வகிக்கும் சிறப்பிடத்தைக் கீழ்வருமாறு விளக்கலாம்.

  • இயேசு தம்மைப் பின்செல்லும்படி முதல்முதலாக அழைத்தது பேதுருவைத்தான் (காண்க: மத்தேயு 4:18-19).
  • இயேசு திருத்தூதர்களிடம் கேள்விகள் கேட்ட போதெல்லாம் அவர்கள் பெயரால் பதில் கூறுபவர் பேதுருவே (காண்க: மாற்கு 8:29; மத்தேயு 18:21; லூக்கா 12:41; யோவான் 6:67-69).
  • லூக்கா மற்றும் பவுல் தரும் தகவல்படி, உயிர்த்தெழுந்த இயேசுவை முதன்முறையாகச் சந்தித்தவர் பேதுருவே (காண்க: லூக்கா 24:34; 1 கொரிந்தியர் 15:5). மத்தேயு, யோவான், மாற்கு நற்செய்திகளின்படி, மகதலா மரியா உயிர்த்தெழுந்த இயேசுவை முதலில் காண்கிறார். ஆனால் அங்குகூட, "நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், 'உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்' எனச் சொல்லுங்கள்" என்று இயேசு கூறுகிறார் (மாற்கு 16:7).
  • எல்லா நற்செய்தி நூல்களிலும் அதிக முறை பெயர்சொல்லிக் குறிப்பிடப்படும் திருத்தூதர் பேதுரு தான்.
  • இயேசு பேதுருவிடம் தான் பிற திருத்தூதர்களை விட அதிக பொறுப்பு ஒப்படைக்கிறார்.
  • பன்னிரு திருத்தூதர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தரப்படும் இடங்களில் எல்லாம் நற்செய்தி நூல்கள் பேதுருவைத் தான் முதன்முதலாகக் குறிப்பிடுகின்றன (காண்க: மாற்கு 3:16-19; மத்தேயு 10:1-4; லூக்கா 6:12-16
  • பண்டைய இசுரயேல் நாட்டில் முதல் மகன், முதலில் வருபவர், பெயர்ப்பட்டியலில் முதலில் இருப்பவர் என்னும்போது அவருக்குச் சிறப்பிடம், தனிப் பணி உண்டு என்று பொருளாகும். பேதுரு எருசலேம் கிறித்தவ சபையில் மிக முக்கியமான ஒருவராக இருந்தார்என்பதைக் குறிக்க, தூய பவுல் பேதுருவை அச்சபையின் "தூண்" என்று அழைக்கின்றார் (காண்க: கலாத்தியர் 2:9). வேறு பல திருச்சபைச் சமூகங்களிலும் பேதுரு செல்வாக்கு பெற்றிருந்தார் (காண்க: திருத்தூதர் பணிகள் 1:15-26; 2:14-40; 3:1-26; 4:8; 5:1-11, 29; 8:18-25; 9:32-43; 10:5; 12:7; 1 பேதுரு 2:11; 5:13).


ஆதாரங்கள்

[தொகு]

விக்கிமூலம்:இணைப்பு

[தொகு]

பேதுரு - எழுத்துப் படையல்கள்

  翻译: